Tamilசெய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அடுத்த நாள் பிப்ரவரி 1-ந்தேதி மந்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக மக்களவையில் பேசினார். இன்று மாநிலங்களவையில் பேசுகிறார். நாளைமறுநாள் (பிப்ரவரி 9-ந்தேதி) வெள்ளிக்கிழமையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய இருந்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, 2014-க்கு முன் இந்திய பொருளாதாரம், மோடி தலைமையிலான பா.ஜனதா அமைந்த பின் 2014-க்குப்பின் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஒப்பீடு குறித்து வெள்ளை அறிக்கை மக்களைவில் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதி முடிவடையும் நிலையில், மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 10-ந்தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த நாட்டின் மோசமான பொருளாதார நிலை, பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசு எப்படி திருப்பத்தை கொண்டு வந்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.

பொதுவாக பாராளுமன்றத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவல் பணிகள் செயல்படாது. இருந்த போதிலும் சனிக்கிழமைகளில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளன.