படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் விரைவில் அறிமுகம் – அதிகாரிகள் தகவல்

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதிவேக பயணம், குளிர்சாதன வசதி, நேரம் மிச்சமாவதால் வந்தே பாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 27-ந்தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் புதிதாக 5 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம், போபால்- ஜபல்பூர், கஜிராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரெயில்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. இந்த நிலையில், 24 மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெல்களில், 27 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

வந்தே பாரத் ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து இயக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 27-ந்தேதி ஒரே நேரத்தில் பல்வேறு வழித்தடங்களில் 5 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இதன்மூலம், வந்தே பாரத் ரெயில்கள் 24 மாநிலங்களை இணைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆண்டு ஜூன் 21-ந்தேதி வரையில் இயக்கப்பட்ட 2 ஆயிரத்து 140 டிரிப்களில், மொத்தம் 27 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில், விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news