லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்று ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அப்போது லாரியை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் படப்பிடிப்பு மூன்று மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து நடிகர் விஷால் தனது இணையப் பக்கத்தில் பதிவு ஒன்ற பகிர்ந்துள்ளார். அதில், “சில நொடிகள் மற்றும் சில அங்குலங்களில் என் வாழ்க்கையைத் தவறவிட்டிருப்பேன், எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.