`மீடூ’ புகார்கள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரை பிரபலங்கள் பலரும் பாலியல் பிரச்சனையில் சிக்கினர்.
கங்கனா ரணாவத் நடித்த குயின் என்ற இந்தி திரைப்படத்தின் இயக்குநர் விகாஷ் பஹால் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டினை கூறினார். இதில் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத் அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசினார்.
சமீப காலங்களில் ரணாவத்தின் படங்கள் வெளியாகும் பொழுது, சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜான்சி ராணி கதையை அடிப்படையாக கொண்ட `மணிகர்னிகா’ படத்தில் கங்கனா நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 25ந் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த பாலியல் சாராத துன்புறுத்தல்களை பற்றி தெரிவித்து உள்ளார். அவர் கூறும்பொழுது, துன்புறுத்தல்கள் பல மட்டங்களில் நடைபெறுகிறது. என்னுடைய பணியில் பல நடிகர்களிடம் இருந்து இதுபோன்ற துன்புறுத்தல்களை நான் சந்தித்துள்ளேன்.
நான் படப்பிடிப்பு தளங்களில் பலமுறை, பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கவில்லை. ஆனால் வேறு விதங்களில் துன்புறுத்தப்பட்டேன். சில நடிகர்கள் ஈகோவுடன் செயல்பட்டனர். அவை மீடூவின் கீழ் வராது. ஆனால் அவை துன்புறுத்தல்களே.
இவற்றில் படப்பிடிப்பு தளத்தில் 6 மணிநேரத்திற்கு மேல் காக்க வைப்பது, தவறான நேரத்தில் படப்பிடிப்புக்கு அழைத்து விட்டு நிற்க வைப்பது, தேதிகளை எப்பொழுதும் தவறாக கொடுத்து அதனால் சந்தர்ப்பங்களை தவற செய்ய விடுவது, இதுபோன்ற நடிகர்கள் கடைசி நிமிடத்தில் படப்பிடிப்பினை ரத்து செய்வது ஆகியவை சில.
இதேபோன்று பட விழாக்களுக்கு அழைக்காமல் விட்டு விடுவது, என்னை அழைக்காமல் பட டிரெய்லரை வெளியிடுவது, என்னிடம் சொல்ல கூட இல்லாமல் வேறு சிலரை டிப்பிங் பேச வைப்பது என துன்புறுத்தல்கள் தொடர்ந்துள்ளன என்று தெரிவித்து உள்ளார்.