இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் ‘கேடி – தி டெவில்’. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், ஹீரோ துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் இருவருக்கும் இடையிலான சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன் வெடித்ததில் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சிதறிய கண்ணாடி துண்டுகள் அவரின் முகம், முழங்கை ஆகிய இடங்களில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் தத், விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.