Tamilசெய்திகள்

பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடும் பனி – மக்கள் அவதி

நாட்டில் குளிர்கால பருவநிலையை தொடர்ந்து வடமாநிலங்களில் அதிக பனிப்பொழிவு வீசி வருகிறது.  இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், பஞ்சாப், வடமேற்கு ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் அடர் மற்றும் அதிக அடர்பனி பதிவாகி உள்ளது.

டெல்லி (பாலம் பகுதி), பீகார், அசாம் மற்றும் திரிபுரா ஆகிய 4 மாநிலங்களில் மித அளவிலான பனி படர்ந்துள்ளது.  கடும் பனியால் இன்று காலை 5.30 மணிக்கு பின்னரே ஓரளவுக்கு பார்க்க முடிந்தது.

பரேலி, லக்னோ மற்றும் கோரக்பூரில் தெளிவற்ற வானிலையால் தலா 25 மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையே காண முடிந்தது.  கங்காநகர், பாட்டியாலா, பஹ்ரைச் மற்றும் பூர்னியாவில் தலா 50 மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையும், தேஜ்பூர் மற்றும் நாலியாவில் தலா 200 மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையும் காண முடிந்தது.

நாட்டின் தலைநகர் டெல்லி (பாலம் பகுதி), அமிர்தசரஸ், சுல்தான்பூர், பாட்னா, பகல்பூர் மற்றும் கைலாஷர் பகுதிகளில் தலா 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள பொருட்களை காண முடிந்தது என தெரிவித்து உள்ளது.

கடந்த சில நாட்களாக பல மாநிலங்களில் காலையில் வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக பதிவாகி வருகிறது.  டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தெளிவற்ற வானிலையால் அந்த பகுதிகளில் சாலைகளில் செல்லும் பேருந்து, கார் மற்றும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இதனால் பணிக்கு செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.  அவர்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது