177 இடங்களைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜ.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
சரண்ஜித் சிங் சன்னியின் உறவினரான புபீந்தர் சிங் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் குமாருக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் புபீந்தர் சிங் ஹனியின் வீடு மற்றும் அவருக்கு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இதில் 6 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் முதல் மந்திரியின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.