பஞ்சாப் அணியுடனான தோல்விக்கு பந்து விச்சு தான் காரணம் – டோனி விளக்கம்
ஐ.பிஎல் போட்டியில் சி.எஸ்.கே.அணி பஞ்சாப்பிடம் வீழ்ந்து 4-வது தோல்வியை தழுவியது. சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன் குவித்து.
கான்வே 52 பந்தில் 92 ரன்னும் (16 பவுண்டரி, 1 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்தில் 37 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) ஷிவம் துபே 17 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். அர்ஷ்தீப் சிங், சாம் கரண், ராகுல் சாஹர், சிக்கந்தர் ராசா தலா 1 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. பிரப்சிம்ரன் சிங் 24 பந்தில் 42 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), லிவிங்ஸ்டோன் 24 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி , 4 சிக்சர்), சாம் கரண் 20 பந்தில் 29 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். துஷ்கர் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும் , ஜடேஜா 2 விக்கெட்டும் , பதிரனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது தோல்வி ஏற்பட்டது. உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் 2-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் சி.எஸ்.கே. கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஆட்டத்தின் நடுப்பகுதியில் நாங்கள் ஆட்டத்தை தவறவிட்டோம். 200 ரன் என்பது போதுமான ஸ்கோராகும். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் பந்து வீச்சு தான் சரியாக அமையவில்லை. இரண்டு மோசமான ஓவர்களை வீசியது ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
பதிரனா நன்றாக வீசினார். ஆனால் அதை தவிர திட்டங்கள் தவறாக இருந்ததா அல்லது செயல்படுத்துதல் மோசமாக இருந்ததா? என்பதை நாம் பார்க்க வேண்டும். முதலில் பந்தை எப்படி வீச வேண்டும்; பேட்ஸ்மேன்கள் அதை எப்படி அடிப்பார் என்பதில் பவுலர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
பந்து வீச்சில் தவறு செய்துவிட்டோம். என்ன தவறு நடந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும். எங்களது பந்து வீச்சாளர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இதனால் பேட்டிங்கில் தான் அதனை ஈடு செய்ய வேண்டும். எனவே பேட்டிங்கில் இன்னும் கூடுதலாக 10 ரன்கள் வரை சேர்த்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நாளை மறுநாள் (3-ந் தேதி) லக்னோவில் சந்திக்கிறது. பஞ்சாப் அணி பெற்ற 5-வது வெற்றியாகும். அந்த அணி அடுத்த போட்டியில் மும்பையை அதே தினத்தில் எதிர்கொள்கிறது.