திருவனந்தபுரம் அருகே உள்ள சாந்தனூர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்தில் கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது.
அந்த குழந்தையை பிறந்த சில மணி நேரத்திலேயே யாரோ வீசிசென்றுள்ளனர். இதுகுறித்து சாந்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து அது யாருடைய குழந்தை? வீசிச்சென்றது யார்? என்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு பாரிப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் அந்த குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆகவே குழந்தையை கொன்று குப்பையில் வீசிச் சென்றது யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். குழந்தை யாருடையது என்பதை கண்டுபிடிக்க டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் சாந்தனூர் பகுதியில் சமீபத்தில் யாருக்காவது குழந்தை பிறந்ததா? யாராவது கர்ப்பமாக இருந்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த குழந்தை சாந்தனூர் அருகே உள்ள வேலுவிளை பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி ரேஷ்மா (வயது21) என்பவருக்கு பிறந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு பிறந்த குழந்தையை கொன்று குப்பையில் வீசியதை ரேஷ்மா ஒப்புக்கொண்டார். குழந்தையை கொன்று வீசியதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
எனக்கும், வாலிபர் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சென்றுவிட நான் தீர்மானித்தேன். ஆனால் அதற்கு எனது குழந்தை இடையூறாக இருக்கும் என்று கருதினேன். இதனால் எனக்கு குழந்தை பிறந்ததும் கொன்று குப்பையில் வீசிவிட்டேன் என்றார்.
இதையடுத்து ரேஷ்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை கொலை சம்பவம் நடந்து 6 மாதத்திற்கு பிறகு தற்போது துப்பு துலக்கப்பட்டு, குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளத்தில் பழகிய வாலிபருடன் செல்ல, பெற்ற குழந்தையை பிறந்தவுடன் தாயே கொன்று வீசிய சம்பவம் சாந்தனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.