Tamilசெய்திகள்

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா – தடையை மீறினால் கடும் நடவடிக்கை என காவல்துறை எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 115-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கமுதி தனி ஆயுதப்படை கூட்ட அரங்கில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் நடைபெற்றது.

இதில் மதுரை, ராமநாதபுரம் கோவை உள்பட 28 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 5 டிஐஜிக்களும் இதில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், தேவர் குருபூஜை விழாவையொட்டி இன்று முதல் 30ந் தேதிவரை 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கூறினார்.

தடை செய்யப்பட்ட பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாவும், காவல் துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுபவர்களின் வாகனங்களை, கண்காணிப்பு கேமராக்கள் பதிவு மூலம் ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதனிடையே, தேவர் ஜெயந்தி விழாவின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.