ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், எம் 10 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் மல்லிகா தயாரிப்பில், விக்ராந்த், வசுந்தரா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பக்ரீத்’ படம் எப்படி என்று பார்ப்போம்.
பொருளாதார ரீதியாக கஷ்ட்டப்படும் விவசாயியான விக்ராந்த், இஸ்லாமியர் ஒருவரிடம் கடன் வாங்க செல்லும் போது பக்ரீத்துக்காக அவர் வீட்டில் ஓட்டகம் ஒன்று கொண்டுவரப்படுகிறது. அந்த ஒட்டகத்துடன் குட்டி ஒட்டகம் ஒன்று இருக்க, அதன் முன் பெரிய ஒட்டகத்தை வெட்ட யோசிப்பவர், குட்டி ஒட்டகத்தை என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது, அதை விக்ராந்த் தனது வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறார்.
ஒட்டகத்தை வீட்டுக்கு அழைத்து வரும் விக்ராந்த் மற்றும் அவரது மனைவி வசுந்தரா, மகள் ஸ்ருதிகா ஓட்டகத்தை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாசம் காட்டி வளர்க்கிறார்கள். ஒட்டகம் வளர்ந்த நிலையில், திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போக, கால்நடை மருத்துவரான எம்.எஸ்.பாஸ்கர், ஒட்டகம் அதன் வாழ்விடத்தில் இருந்தால் தான் நலமாக இருக்கும், இங்குள்ள சூழல் அதற்கு ஒத்துவராது, என்று கூற, அதை கேட்டு ஒட்டகத்தின் வாழ்விடமான ராஜஸ்தானிலேயே ஒட்டகத்தை விட்டுவிட முடிவு செய்யும் விக்ராந்த், ஒட்டகத்துடன் ராஜஸ்தானுக்கு பயணிக்க, வழியில் பசு பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்பவர், அதையெல்லாம் சமாளித்து ஓட்டகத்தை ராஜாஸ்தானில் விட்டுவிட்டு வீடு திரும்பினாரா இல்லையா, என்பதை மனிதத்துடன் சொல்லியிருப்பது தான் ‘பக்ரீத்’ படத்தின் கதை.
ஒட்டகத்தை மையமாக வைத்து கதை இருந்தாலும், மனிதர்களுக்கு மனித நேயம் என்பது ரொம்ப முக்கியம் என்பதை நினைவூட்டும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
விக்ராந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் நடிகராக இந்த படத்தில் முத்திரை பதித்திருக்கிறார். விவசாயியாகவும், பாசமான அப்பாவாகவும், விலங்கிடம் அன்பு காட்டும் மனிதர் என்று இயல்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னால் அதில் பொருந்த முடியும் என்று விக்ராந்த் நிரூபித்திருக்கிறார்.
விக்ராந்தின் மனைவியாக நடித்திருக்கும் வசுந்தராவை இதுபோன்ற வேடத்தில் ஏற்கனவே பார்த்திருந்தாலும், அவரது இயல்பான நடிப்பு, அவர் எத்தனை முறை இதுபோன்ற வேடத்தில் நடித்தாலும் அதை பார்க்கலாம், என்று எண்ண வைக்கிறது. விக்ராந்த் – வசுந்தரா தம்பதியின் மகளாக நடித்திருக்கும் ஸ்ருதிகாவின் மழலை நடிப்பும் நம்மை கவர்ந்துவிடுகிறது.
’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வில்லனாக மிரட்டிய ரோகித் பதாக், லாரி ஓட்டுநராக காமெடியில் கலக்கியிருக்கிறார். விக்ராந்தை ராஜஸ்தானுக்கு லாரியில் அழைத்துச் செல்லும் அவரது நகைச்சுவை காட்சிகள் கதையோடு பயணிப்பதோடு, நம்மை சிரிக்கவும் வைக்கிறது.
டி.இமானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
இயக்குநர் ஜெகதீசன் சுப்பு தான் ஒளிப்பதிவும் செய்திருப்பதால், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேம்ராவில் பதிவாக்கியிருக்கிறார். லாரி மூலமாகவே வட இந்தியாவை சுற்றி காற்றுபவர், பசு காவலர்களின் எண்ட்ரிக் காட்சியில் நம்மை படபடக்க வைத்துவிடுகிறார்.
ஒட்டகத்தை நாம் வளர்ப்பது என்பது கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், அந்த ஒட்டகத்தை சுற்றி இயக்குநர் ஜெகதீசன் சுப்பு அமைத்திருக்கும் திரைக்கதையும், அதை அவர் பயணிக்க வைத்த விதத்திற்கும் சபாஷ் சொல்லலாம். அதே சமயம், விக்ராந்த், ஒட்டகத்திற்கு இடையிலான செண்டிமெண்ட் பெரிய அளவில் நம்மை ஈர்க்காமல் போகிறது. இருப்பினும், தற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்கள் விட்டுகொடுத்து வாழ வேண்டும், என்ற மெசஜை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
பாசம், நேசம் என்று செண்டிமெண்டாக பயணிக்கும் படம், பசு பாதுகாவலர்கள் கோஷ்ட்டி எண்ட்ரியானவுடன் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றுவிடுகிறது. பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் அவர்கள் செய்யும் அராஜகங்களையும், வன்முறைகளையும் தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் ஜெகதீசன் சுப்புவுக்கு வீரவாள் ஒன்றை பரிசாக கொடுக்கலாம்.
சில இடங்களில் விருதுக்குண்டான படமாக தெரிந்தாலும், அண்ணன், தம்பி இடையே பிரச்சினை இருந்தாலும், அவர்களுக்குள் இருக்கும் பாசம், விவசாயிகளின் அவல நிலை உள்ளிட்ட அனைத்தையும் மக்களை சென்றடையும் விதத்தில் கமர்ஷியல் அம்சங்களோடும் சொல்லியிருக்கும் இயக்குநர் ஜெகதீஷ் சுப்பு, குடும்பத்தோடு பார்க்க வேண்டிய விதத்தில் ஒரு பர்பெக்ட் படமாக இயக்குநர் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘பக்ரீத்’ அனைத்து மக்களும் கொண்டாடும் அன்பு திருவிழா
-விமர்சன குழு