இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பல்கேரியா, மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல்கட்டமாக நேற்று பல்கேரியா தலைநகர் சோபியா வந்தடைந்த அவர் பல்கேரியா வெளியுறவுத்துறை மந்திரி எக்கடெரினா ஸ்ஹரியேவா-வுடன் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக, எட்டாம் நூற்றாண்டு முதல் இந்தியாவுடன் நெருங்கிய தோழமை பாராட்டிவரும் பல்கேரியாவின் நட்புறவை இந்தியா பெரிதும் மதிப்பதாக சுஷ்மா தெரிவித்தார்.
பின்னர், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது பொருளாதாரம், வேளாண்மை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் தொடர்பாக இருநாடுகளும் தொடர்ந்து கூட்டுறவுடன் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் பல்கேரியா துணை பிரதமரையும் சுஷ்மா சந்தித்தார்.