Tamilசெய்திகள்

நேஷனல் ஹெரால்டு விவகாரம் – காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க பதிலடி

காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்குதாரரகளாக உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்குகளை இந்தியா அசோசியேட் நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

ராகுல் காந்தி இன்றும், சோனியா காந்தி வரும் 8 ஆம் தேதியும் ஆஜராகும்படி அந்த சம்மனில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, 1942 இல் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடங்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் அதை அடக்க முயன்றனர். தற்போதும் மோடி அரசும் அதையே செய்கிறது, இதற்காக மத்திய அமலாக்கத்துறையை அது தவறாக பயன்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் குற்றச்சாட்டிற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.  ஒரு குற்றவாளி தனது குற்றத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு குற்றவாளி தன்னை ஒரு குற்றவாளி அல்லது நேர்மையற்றவர் என்று ஏற்றுக்கொள்வதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று நட்டா தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதை நீதிமன்றம் கவனித்து வருகிறது என்றும், உங்கள் மீது குற்றப்பத்திரிக்கை உள்ளது என்றால், நீதிமன்றத்திற்கு சென்று அதை எதிர்கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்