1937-ல் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜா்னல் நிறுவனம் (ஏ.ஜே.எல்) சாா்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது. 1947-ல் சுதந்திரத்துக்கு பிறகு முதல் பிரதமராக நேரு பதவியேற்றதால் இயக்குனர் பதவியில் இருந்து நேரு விலகினாா்.
காங்கிரஸ் கட்சி செய்திகளை பிரதானமாக தாங்கி வந்த அந்தப் பத்திரிகை 2008-ல் மூடப்பட்டபோது, அந்த நிறுவனத்துக்கு (ஏ.ஜே.எல்.) ரூ.90.21 கோடிக்கு கடன் இருந்தது. ஏ.ஜே.எல். நிறுவனத்தை 2012-ல் தலா 38 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் யங் இந்தியா நிறுவனம் வாங்கியது.
காங்கிரஸ் கட்சியின் பணத்தைப் பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, அமலாக்கத்துறை கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்து, காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே, கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடியிலான அசையா சொத்துகளை முடக்குவதற்கான அறிவிக்கையை அமலாக்கத்துறை நேற்று வெளியிட்டது. அதில் டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள ரூ.661.69 கோடியிலான அசையா சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் பங்குகள் மூலமாக கையகப்படுத்தியதில் குற்றம் நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்ட 7 பேரிடம் மீண்டும் அமலாக்கத்துறை விரைவில் விசாரணை நடத்தி இரண்டாவது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வின் கூட்டாளியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று விமா்சித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘5 மாநிலத் தோ்தல் தோல்வி பயத்தால் இந்த நடவடிக்கையை பா.ஜ.க. மேற்கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் பெட்டி நடவடிக்கைக்கு காங்கிரஸ் அஞ்சாது. பணப் பரிவா்த்தனையே நடைபெறாத இந்த விவகாரத்தில் சொத்துகள் முடக்கப்படுவதற்கு, இந்த நிறுவனத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடா்பு உள்ளதே காரணம்’ என்று அவா் தெரிவித்தாா்.