Tamilசெய்திகள்

நேற்று ஒரே நாளில் சென்னைக்கு 2.50 லட்சம் பேர் வந்தனர்

தீபாவளி பண்டிகை 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. சென்னையில் தொழில் செய்து வரும் லட்சக்கணக்கான மக்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 6 லட்சம் பேர் வெளியூர் சென்றனர். பஸ் இல்லை என்று சொல்லாத அளவிற்கு போதுமான பஸ்கள் இயக்கப்பட்டதால் பிரச்சினை எதுவும் உருவாகவில்லை. இதே போல பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளது. நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நேற்று 2,100 வழக்கமான பஸ்களுடன் 1,513 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 2½ லட்சம் பேர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னை வந்து சேர்ந்தனர். இன்று 3 ஆயிரம் அரசு பஸ்கள் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. இதன் மூலம் 1½ லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர். தொடர்ந்து நாளை மற்றும் இந்த வாரம் முழுவதும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் 28, 30-ந்தேதிகள் முகூர்த்த நாளாக இருப்பதால் பஸ் பயணம் அதிகரிக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி, மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, ஓசூர், திருப்பத்தூர், சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பகல் நேர பயணம் மேற்கொண்டு சென்னைக்கு இரவுக்குள் வந்து சேருகின்றனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய பஸ்களில் இருக்கைகள் காலியாக உள்ள நிலையில் வெளியூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரக்கூடிய பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அரசு பஸ்கள் மட்டுமின்றி ஆம்னி பஸ்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.