Tamilசெய்திகள்

நேற்று இரவு நேரத்தில் பயணம் செய்தவர்கள் இன்று போக்குவரத்து இன்றி தவிப்பு!

இன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி சென்னை உள்பட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதேபோன்று மாவட்டங்களுக்கு இடையே அரசு விரைவுப்பேருந்துகளும் ஓடின. சென்னையில் இருந்து வெளி இடங்களுக்கு வழக்கம்போல நேற்று இரவு பஸ் போக்குவரத்து நடைபெற்றது.

இப்படி பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் இன்று காலையில் சென்னை உள்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் காலையில் வந்து இறங்கினார்கள். இதுபோன்று வெளியூர்களில் இருந்து இரவில் பயணம் செய்து திரும்பியவர்கள் வாகன வசதியின்றி பஸ் நிலையங்கள் அருகே திண்டாடியதை காணமுடிந்தது.

சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் அருகில் ரெயில் பயணிகளும் போதுமான வாகன வசதியின்றி தவித்தனர். ரெயில்கள், பஸ்களில் பயணம் செய்தவர்கள் இன்று காலையில் மட்டும் வாடகை மற்றும் சொந்த வாகனங்களில் டிக்கெட்டுகளை காட்டி வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அதிலும் சிக்கல்கள் நிலவின. ஆட்டோ டிரைவர்கள் பலர் பயணிகளை சவாரி ஏற்றி செல்வதற்கு தயங்கினார்கள். பயணிகளை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு திரும்பும்போது போலீசார் மறித்து கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது என்று பல இடங்களில் ஆட்டோ டிரைவர்கள் சவாரிக்கு வர மறுத்தனர்.

இதையடுத்து வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் சொந்த வாகனங்களில் வீடு திரும்புவதற்காக உறவினர்களை வரவழைத்தனர். இதுபோன்று கோயம்பேட்டுக்கு உறவினர் ஒருவரை அழைத்து செல்ல மோட்டார் சைக்கிளில் வந்த இளம் பெண் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் கோயம்பேட்டில் உறவினரை அழைக்க செல்வதை உறுதி செய்த பிறகும் எச்சரித்தே அனுப்பி வைத்தனர்.

பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே காத்துக்கிடந்ததையும் காண முடிந்தது. தூரமான இடங்களுக்கு சென்றவர்கள் வாடகை வாகனங்களுக்காக நீண்டநேரம் காத்திருந்த பிறகே பயணம் செய்ய நேரிட்டது.

அதேநேரத்தில் அருகில் உள்ள இடங்களில் வசித்த வர்கள் நடந்தே தங்கள் வீடுகளுக்கு சென்றதையும் காண முடிந்தது.

சென்னையை போன்றே திருச்சி, மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களிலும் ரெயில் நிலையங் கள், பஸ் நிலையங்கள் அருகே பயணிகள் இன்று காலையில் போதிய வாகன வசதியின்றி தவித்ததை காணமுடிந்தது.