பாராளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் போன்ற வலிமையான கொள்கைகள் உள்ள ஒரு கட்சியால் தான் மதவெறி பா.ஜனதாவை எதிர்கொள்ள முடியும். பா.ஜனதா மாநில கட்சிகளை வலுவிழக்கச் செய்வது கொள்கையற்ற செயல். இதேபோல மாநில கட்சிகள் செயல்பட்டால் அவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடும். இதன்மூலம் நாடு இருதுருவ அரசியல் தலைமையை நோக்கி செல்லும். இருதுருவ அரசியல் வந்துவிட்டால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். எனவே காங்கிரசுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
சோனியா காந்தி கட்சிக்கு மீண்டும் தலைமை தாங்க தயக்கம் காட்டினார். ஆனால் ராகுல் காந்தி ராஜினாமாவால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மூத்த தலைவர்கள் கூறியதால் ஏற்றுக்கொண்டார். சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவர் தான். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம். அதில் எந்த தவறும் இல்லை. எங்கள் கட்சியில் வேறு யாருக்கும் அந்த சக்தி இல்லை. அது உண்மையில் மிகவும் கடினம்.
இவ்வாறு அவர் கூறினார்.