நேரம் வரும்போது ஓய்வு பற்றி அறிவிப்பேன் – யுவராஜ் சிங்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யுவராஜ்சிங் அடித்த அரைசதம் (35 பந்துகளில் 53 ரன்கள்) ஆறுதல் அளித்ததே தவிர, அணியின் வெற்றிக்கு உதவவில்லை. போட்டிக்கு பிறகு யுவராஜ்சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பான்டுக்கு இடம் கிடைக்குமா? என்பது எனக்கு தெரியாது. இந்த போட்டியில் அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. கடந்த ஆண்டும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அவர் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இளம் வயதிலேயே இரண்டு சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார். அவர் வருங்காலத்தில் மிகச் சிறந்த வீரராக உருவெடுப்பார். அவரை கவனமாக வழிநடத்த வேண்டியது முக்கியமானதாகும். கடந்த 2 வருடங்களாக எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறேன். இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து நான் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை. அதற்கான நேரம் வரும் போது முதல் நபராக ஓய்வு முடிவை அறிவிப்பேன். கிரிக்கெட்டை இளம் வயது முதலே அனுபவித்து ஆடுவதால் நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். எனது ஓய்வு குறித்து குழப்பமான சூழ்நிலை ஏற்பட்ட போது தெண்டுல்கருடன் கலந்து ஆலோசித்தேன். அதில் எனக்கு நல்ல தெளிவு கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.