நேபாளம் நாட்டில் வடமேற்கு பகுதியில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் உள்ள லமிதண்டா என்ற பகுதியை மையமாகக் கொண்டு நேற்று இரவு 11.40 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.4 அலகுகளாக பதிவாகி இருந்தது.
லமிதண்டா நகரின் மையப் பகுதியில் பூமிக்கு கீழ் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் புள்ளி இருந்தது. நிலநடுக்கம் பூமி மேல் பகுதியில் உருவாகி இருந்ததால் அந்த நகரமே குலுங்கியது. இதனால் கட்டிடங்கள் அங்குமிங்குமாக ஆடி நொறுங்கின. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி எழுந்து வெளியே ஓடினார்கள். அந்த நிலநடுக்கம் நேபாளத்தின் வடமேற்கு பகுதியை முழுமையாக குலுக்கியது.
நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் வீடு இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்ததால் எங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதில் நேபாள அரசு திணறியது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. கட்டிட இடிபாடுகளை அகற்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 132 பேர் பலியாகி விட்டனர்.
200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஜாஜர்கோட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தின் அருகில் உள்ள ரூகும் மாவட்டத்திலும் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. நிலநடுக்கத்தின் தாக்கம் நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டிலும் உணரப்பட்டது. அங்குள்ள மக்களும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு வந்தனர். இன்று காலை வரை அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் விடிய விடிய தெருவிலேயே நின்றது பரிதாபமாக இருந்தது. இன்று (சனிக்கிழமை) காலை நேபாள பிரதமர் புஷ்பகமல் பிரசண்டா பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்றார். அவருடன் மருத்துவ குழுவும் சென்று உள்ளது. மீட்பு பணிகளில் நேபாள நாட்டு ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள நாட்டு அதிகாரிகளுடன் இந்திய நாட்டு அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினார்கள். எந்த உதவியும் செய்ய தயார் என்று தெரிவித்தனர். பிரதமர் மோடியும் நேபாள நேபாள நாட்டு பிரதமருடன் பேசினார். நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் ஏராளமான ஊர்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. இன்னமும் அங்கு மீட்பு பணிகள் தொடங்கவில்லை. அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றிய பிறகு தான் உயிரிழப்பு தெரியவரும். நிறைய கட்டிடங்கள் இடிந்து இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நேபாளத்தின் வடமேற்கு பகுதிகளில் பெரும்பாலான சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் மீட்பு பணிகளில் கடும் இடையூறு ஏற்பட்டு உள்ளது.
நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அடுத்தடுத்து 4 தடவை நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் நேபாள மக்கள் பீதியில் உள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் உணரப்பட்டது. இந்த 4 மாநிலங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் டெல்லி, பாட்னா, வாரணாசி உள்பட பல நகரங்களில் மக்கள் நேற்றிரவு அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறினார்கள். விடிய விடிய அவர்கள் தெருக்களில் தங்கியிருந்தனர். வடமாநில மக்கள் பெரும்பாலான அளவில் பீதியுடன் தவிப்புக்குள்ளானார்கள். இன்று காலைதான் வட மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியது.