நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதோடு, சேமித்து வைக்கப்படும் பொருட்களின் இழப்பினைக் கட்டுப்படுத்துவதையும், பொருட்களின் சேமிப்புத் திறனை மேம்படுத்துவதையும் தலையாய நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு வருகிறது.
இதனை முனைப்புடன் செயல்படுத்தும் வண்ணம் பத்தாண்டு கால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8.05 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு திறனுடன் 342 இடங்களில் கிடங்குகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு, 6.29 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 240 கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டன.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக மதுரை மாவட்டம், தோப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்தவெளி களத்தில் வைக்கப்பட்டதன் காரணமாக மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனையறிந்த உணவுத்துறை அமைச்சர் அவர்கள், தோப்பூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அமைச்சரின் உறுதிமொழியையும் மீறி, சில நாட்களிலேயே, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில், திறந்த வெளியில் வைக்கப்பட்ட கொள்முதல் செய்யாத பத்தாயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் சேதமடைந்துள்ளதாக செய்தி வந்தது.
இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில், அன்னப்பன் பேட்டை, சடையார் கோவில், பொன்னாப்பூர் உள்ளிட்ட இடங்களில் குவியல் குவியலாக திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகளும் திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் கடும் மழையில் நனைந்து சேதமடைந்தன.
தற்போது, கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக கும்பகோணம் அருகே சன்னாபுரத்தில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பதாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக நேற்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வெளிவந்துள்ளது. இது ஒரு தொடர் கதையாக இருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிலையில், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது தார்பாய் போட்டு மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தாலோ இந்தச் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும். உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததன் – காரணமாக விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது மிகுந்த வேதனையை அளித்துள்ளது. இனி வருங்காலங்களிலாவது இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து பிற பகுதிகளில் சேமிக்கப்பட்டு திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் உடனடியாகக் கவனம் செலுத்தி, திறந்தவெளி களங்களில் உள்ள நெல் மூட்டைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான கிடங்குகளிலோ அல்லது அரசு கட்டடங்களிலோ பாதுகாப்பாக வைக்கவும், கிடங்குகள் கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.