X

நெல் ஜெயராமன் மறைவு – நட்சத்திரங்கள் இரங்கல்

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 50. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நெல் ஜெயராமன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி கூறும்போது, இயற்கை வேளாண் பொருட்களை அதிகவிலை கொடுத்து வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு என்றார்.

நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.

நடிகர் விஷால்,

நெல் ஜெயராமன் ஐயாவின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. விவசாயத்தில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு இளைஞர்கள் விவசாயம் செய்ய முக்கிய காரணியாக அவர் இருந்தார். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

நடிகர் சசிகுமார்,

நெல் மணி நமக்கு உயிர் கொடுக்க.. அந்த நெல் மணிக்கே புத்துயிர் கொடுத்தவர் நெல் ஜெயராமன் அவர்கள். இயற்கையைப் போற்றிய அவரை நாம் என்றென்றும் போற்றுவோம்,பாரம்பரிய விதைகளைக் காப்போம்.

நடிகர் செளந்தர்ராஜா,

விவசாயிகளும், விவசாயமும் அழிந்து கொண்டுக்கிருக்கும் இந்த மோசமான நிலையில், நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் போன்ற தெய்வங்களின் மறைவு மிக பெரிய சோகம். இளையஞர்கள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்களின் அறிவுரைகளை பரப்ப வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். முடிந்தால் அனைவரும் விவசாயம் பண்ண வேண்டும். இவரது ஆத்மா சாந்தி அடைய விவசாயத்தை காப்போம். மண்ணை நேசிப்போம். மக்களை நேசிப்போம்.

இவ்வாறு கூறியுள்ளனர்.