நெல்லை வெள்ள பாதிப்பு – பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்வு
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரை வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதுபோல் காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணியில் கலந்ததால் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் ஆற்றில் சென்றது. இதில் ஆற்றங்கரையோர குடியிருப்புகள் மற்றும் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மழை சற்று குறைய தொடங்கியதால் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது. இதனால் ஆற்றில் வரும் வெள்ளம் குறைய தொடங்கியது. இன்று காலை தாமிரபரணியில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் சுமார் 60 வயது முதியவர் உடல் மீட்கப்பட்டது. இதேபோல் சி.என்.கிராமம் பகுதியில் சுமார் 80 வயது முதியவர் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் உடலை சந்திப்பு போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேட்டை சுத்தமல்லி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளுவன் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் நெல்லை டவுனில் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை கிருஷ்ணபேரி ஓடைக்கரை தெருவை சேர்ந்தவர் கடற்கன்னி (58). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள குளத்து மறுகால் தண்ணீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கடற்கன்னி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினரும் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை டவுண் மாதா பூங்கொடி தெருப்பகுதியில் கடற்கன்னி உடல் மீட்கப்பட்டது.
நெல்லையில் வெள்ளத்தில் சிக்கி நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.