வங்கக்கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17 மற்றும் 18-ந்தேதி கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் திருநெல்வேலி மாவட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்தன.
மழை நின்ற பிறகும் வெள்ளம் வடிய காலதாமதம் ஆனது. இதனால் பள்ளிகளுக்கு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள்ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்க ஜனவரி 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 4-ந்தேதி அறிவியல், 6-ந்தேதி கணக்கு தேர்வு, 9-ந்தேதி சமூக அறிவியல் தேர்வு, 10-ந்தேதி உடற்கல்வி தேர்வு நடத்தப்பட இருக்கிறது. 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. கனமழை, வெள்ளம் காரணமாக தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.