நெல்லையில் இன்று புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
நெல்லையில் இன்று நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த மு.க.ஸ்டாலின், நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு, நேற்று மாலையில் நெல்லை திரும்பினார்.
இன்று காலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்துள்ள 5 பணிகளை திறந்து வைக்கிறார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
விழா நடைபெற உள்ள நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.ஆஸ்ரா கார்க் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் அவரை வரவேற்று தி.மு.க.வினர் சுவரொட்டிகள் மற்றும் கட்சி கொடிகளை பறக்கவிட்டு உள்ளனர்.