ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புவதாக தனுஷ் தெரிவித்திருந்தார். இதற்கு டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்தார். நெற்றிக்கண் படத்துக்கு கதை எழுதிய என்னிடம் உரிமை பெறாமல் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் என்றும் எச்சரித்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நெற்றிக்கண் ரீமேக் பணிகளை தொடங்கவில்லை என நடிகர் தனுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசு கூறியிருப்பதாவது:- “நடிகர் தனுஷ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நெற்றிக்கண் படத்தை நான் ரீமேக் செய்ய இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது இல்லை. நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த படம் என்று கேட்டார். அதற்கு நெற்றிக்கண் என்று பதில் அளித்தேன்.
அந்த படத்தின் உரிமையை நான் யாரிடமும் வாங்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அதன் முதல் கட்ட பணிகளை தொடங்கியதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்தார். கீர்த்தி சுரேஷின் தாய் மேனகாவும் என்னை தொடர்பு கொண்டு நெற்றிக்கண் ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேசை யாரும் தொடர்புகொள்ளவில்லை என்றார்”. இவ்வாறு விசு கூறியுள்ளார். இதன் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.