X

நெதர்லாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி 41 ஓவராக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 41 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது.

கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஸ்காட் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 78 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், பிலிப் சால்ட் சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேசன் ராய் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பிலிப் சால்ட் 77 ரன்னில் வெளியேறினார். டேவிட் மலான், மொயீன் அலி ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில், இங்கிலாந்து 36.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மலான் 36 ரன்னும், மொயீன் அலி 42 ரன்னும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.