நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. ரோட்டர்டாம் நகரில் நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சதமடித்து அசத்தினார். அவர் 109 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 74 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஷதாப் கான் 28 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. எளிதில் வெற்றி பெறலாம் என நினைத்த பாகிஸ்தான் அணிக்கு நெதர்லாந்து வீரர்கள் சவாலாக ஆடினர். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 71 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் மற்றும் டாம் கூப்பர் தலா 65 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில், நெதர்லாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.