Tamilவிளையாட்டு

நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடியது. முதல் 2 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. நேற்று முன் தினம் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்தது. கைல் மேயர்ஸ் (120 ரன்), ஷமர்க் புருக்ஸ் (101ரன்) தங்களது முதல் சதத்தை அடித்தனர்.

இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து 49.5 ஓவரில் 288 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 20 ரன் வித்தியாசத்தில் வென்றது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 89 ரன்னும், விக்ரம் ஜித்சிங் 54 ரன்னும், மூசா அகமத் 42 ரன்னும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் ஒரு நாள் போட்டித்தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.