நெதர்லாந்து நாட்டின் கடற்கரை பகுதியில் 3000 கார்களை ஏற்றி சென்ற ஒரு சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார். 199 மீட்டர் நீளமுள்ள பனாமாவில் பதிவு செய்யப்பட்ட “ஃப்ரெமாண்டில் ஹைவே” எனும் கப்பல் ஜெர்மனியிலிருந்து எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அக்கப்பலில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பலர் கடலில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது:
இறந்த இந்திய மாலுமியின் குடும்பத்தோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் செய்கிறோம். காயமடைந்த 20 பேருடனும் தொடர்பில் உள்ளோம். அந்த கப்பல் நிறுவனத்திடமிருந்தும், நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்தும் தேவைப்படும் தகவல்களை பெற்று வருகிறோம்.
இவ்வாறு தூதரகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
23 மாலுமிகளை மீட்க மீட்பு படகுகளும், ஹெலிகாப்டர்களும் உபயோகப்படுத்தப்பட்டதாக டச்சு கடலோர காவற்படை தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்து வெளியாகும் படங்களில் அக்கப்பலிலிருந்து புகை வருவது தெரிகிறது. கப்பலில் இருந்த 25 எலக்ட்ரிக் கார்களில் ஒன்றிலிருந்து இந்த தீ உருவாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ உருவாகி 16 மணி நேரம் ஆகியும் தியணைப்பு படையினரால் தீயை அணைக்க முடியவில்லை. தீயை முழுவதும் அணைக்க பல நாட்கள் ஆகலாம் என்றும் தீயை அணைக்க நீரை கப்பலில் கொண்டு தேக்கி வைத்து பயன்படுத்தும் போது நீரின் பாரத்தினால் கப்பல் கவிழ்ந்து விடும் ஆபத்து இருப்பதால், தீயை அணைக்க சரியான வழிமுறையை திட்டமிட வேண்டும் எனவும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாடன் கடலில் உள்ள அமலேண்ட் தீவின் கடற்கரை பகுதியிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் அருகே இக்கப்பலிலிருந்து உதவி கோரும் அழைப்பு முதலில் வந்ததாக கடலோர காவற்படை தெரிவித்தது.