நெட் ரன் ரேட் பற்றி சிந்திப்பது உதவாது – டோனி பேட்டி
ஐ.பி.எல் போட்டியில் டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வது வெற்றியை பெற்றது.
மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது.
தொடக்க வீரர் கான்வே ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 49 பந்தில் 87 ரன்னும் ( 7 பவுண்டரி , 5 சிக்சர்), மற்றொரு தொடக்க ஆட்டக்காரரர் ருதுராஜ் கெய்க்வாட் 33 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிவம் துபே 19 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி , 2 சிக்சர்) , கேப்டன் டோனி 8 பந்தில் 21 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர் எடுத்தனர். நோர்க்யா 3 விக்கெட்டும் ,கலீல் அகமது 2 விக்கெட்டும் , மிச்சேல் மார்ஷ் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.4 ஓவரில் 117 ரன்னில் சுருண்டது. இதனால் சென்னை அணி 91 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மிச்சேல் மார்ஷ் அதிகபட்சமாக 20 பந்தில் 25 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) , கேப்டன் ரிஷப் பண்ட் 11 பந்தில் 21 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். மொய்ன் அலி 3 விக்கெட்டும், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங், பிராவோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 4வது வெற்றியாகும். டோனி கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்ற பிறகு 2 வது வெற்றி கிடைத்துள்ளது.
இந்த வெற்றி மூலம் சி.எஸ்.கே. 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறியது. வெற்றி குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:-
நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். பேட்ஸ்மேன்கள் மிகவும் அபாரமாக செயல்பட்டார்கள். மிகப் பெரிய வெற்றி உதவுகிறது. இது மாதிரியான வெற்றி முன்னதாக வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். டாஸ் வென்றால் பந்துவீசலாம் என்று விரும்பினோம். ஆனால் டாஸ் தோற்க வேண்டும் என்று தோன்றியது.
ரன்களை அதிகமாக குவிக்கும் போது பந்து வீச்சாளர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும். டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது அவசியமாகும். முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் திறமையானவர்கள். முதிர்ச்சி அடைய நிறைய போட்டியில் ஆட வேண்டும்.
விளையாட்டு உணர்வு முக்கியமானது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை எந்த பந்து போட வேண்டும் என்பதை விட எந்த பந்தை வீசக்கூடாது என்பதைதான் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
பிளே ஆப் சுற்று குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. பிளேஆப், நிகர ரன் ரேட் பற்றி நினைத்தால் தேவையில்லாத அழுத்தம் தான் ஏற்படும். நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் கவனம் செலுத்த விரும்புகிறோம்.
இப்போதைக்கு அதுதான் தேவை. நான் கணக்கு பாடத்தை பெரிதாக விரும்புபவன் அல்ல. பள்ளியில் படிக்கின்ற நாளில் இருந்தே நான் இப்படிதான் உள்ளேன். எனக்கு கணக்கு வராது.
நெட் ரன் ரேட் பற்றி சிந்திப்பது உதவாது. போட்டிகளை அனுபவித்து ஆட வேண்டும். பிற அணிகள் விளையாடும் போது அதனை நினைத்து நெருக்கடி அடைய தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன்.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் நல்லது. முன்னேறாவிட்டால் உலகம் ஒன்றும் முடிந்து விடாது.
இவ்வாறு டோனி கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 12-ந் தேதி எதிர்கொள்கிறது.
டெல்லி அணி 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை 11ந் தேதி சந்திக்கிறது.