நூதன முறையில் ‘காலா’ பட நடிகை அஞ்சலி பாட்டீலிடம் ரூ.5 லட்சம் மோசடி – மர்ம கும்பலை தேடும் போலீஸ்

தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் நடித்தவர் அஞ்சலி பாட்டீல். இவர் ‘குதிரைவால்’ என்ற படத்திலும் நடித்து உள்ளார். மேலும் இந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 36 வயதான அஞ்சலி பாட்டீல் மும்பை அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை அஞ்சலி பாட்டீலுக்கு கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் போன் செய்துள்ளார். அவர் உங்களது பெயரில் வெளிநாட்டில் இருந்து வந்த பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகவும், அதை சுங்க துறையினர் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுமாறு கூறினார்.

இதைத்தொடர்ந்து ஸ்கைப் மூலமாக மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என பானர்ஜி என்ற பெயரில் ஒருவர் நடிகை அஞ்சலி பாட்டீலை தொடர்பு கொண்டார். அவர் நடிகையிடம் உங்களது 3 வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்து இருப்பதாகவும் இதுகுறித்து சரிபார்ப்பு பணி செய்ய ரூ.96 ஆயிரத்து 525-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதைகேட்ட நடிகை அஞ்சலி பாட்டீல் யோசிக்காமல் அவர் கேட்ட பணத்தை ஜிபே மூலம் அனுப்பினார். பின்னர் அவர் வங்கி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், அதுகுறித்து விசாரிக்க மேலும் ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 291-ஐ செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அந்த பணத்தையும் நடிகை அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில் அஞ்சலி பாட்டீல், சம்பவம் குறித்து தனது வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்தார். அவர் இது மோசடியாக இருக்கலாம் என நடிகையிடம் கூறியுள்ளார். இதையடுத்து நடிகை அஞ்சலி பாட்டீல், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகையிடம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema