Tamilசெய்திகள்

நீலகிரி மாவட்ட மக்களுக்கு உதவ வேண்டும் – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் மக்கள் பேரின்னலுக்கு உள்ளாகியிருக்கும் செய்தியறிந்து மிகுந்த வேதனைப்படுகிறேன். ஆங்காங்கே நிகழும் நிலச்சரிவுகள் மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பேராபத்தாக இருக்கிறது. துயரத்தில் உழலும் மக்களுக்கு அரசின் சார்பிலான உதவிகள் நேரத்திற்குச் சென்றடையவில்லை. பேரிடர் பணிகள் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் முழு வீச்சில் முடுக்கி விடப்படவில்லை.

தென் மேற்குப்பருவமழை கடுமையாக இருக்கும் என்ற வானிலை அறிக்கையின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு, எப்போதும் போல் அலட்சியம் காட்டியதன் விளைவு, இன்று நீலகிரி வாழ் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செயலற்று, ஸ்தம்பித்துப்போன அரசு, ஊழல் மழையில் நனைந்துவரும் அமைச்சர்கள், எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாத நிர்வாகம் போன்றவற்றால் மக்கள் அல்லலுக்குள்ளாகி, அவதிப்பட்டு நிற்பதை நாமும், அ.தி.மு.க.வைப்போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆங்காங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு ஆறுதல் அளித்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. அரசு என்றாலும், தி.மு.க. தான் பேரிடர் காலங்களில் மக்களைத் தேடிச்சென்று நிவாரணப் பணிகளைக் காலத்தே செய்கிறது என்று மக்கள் அடையாளம் காட்டும் வகையில், நலத்திட்ட உதவிகளை பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *