Tamilசெய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் தீவிரம் அடையும் பருவமழை

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்தாலும் கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்யாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நேற்றும் ஊட்டி, கூடலூர், அவலாஞ்சி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அவலாஞ்சியில் விடிய விடிய கனமழை கொட்டியது. அதிகபட்சமாக அங்கு 38 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தொடர் மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓவேலி சாலையில் சோதனைச்சாவடியை அடுத்துள்ள கெவிப்பாறை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் நள்ளிரவு விழுந்தது. தகவல் அறிந்த கூடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், மின்வாரிய ஊழியா்கள் விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்து மரத்தை அப்புறப்படுத்தினா்.

இதையடுத்து, காலையில் போக்குவரத்து சீரானது. மின்கம்பிகள் அறுந்ததால் கெவிப்பாறை, ஹெல்த்கேம்ப் ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கின. இதேபோல ஊட்டியில் இருந்து பார்சன்ஸ்வேலி செல்லும் சாலையில் கவர்னர்சோலை பகுதியிலும் ஒரு மரம் நடுரோட்டில் முறிந்து விழுந்தது. இதனால் அங்கும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.

கனமழை காரணமாக கூடலூா் எஸ்.எஸ். நகா் பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓவேலி பேரூராட்சி பெரியசூண்டியில் வேலு என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் விடுதி கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் (40) மற்றும் குப்புசாமி (30) ஆகியோர் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மண்சரிவு ஏற்பட்டு 2 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 2 பேரையும் உயிருடன் மீட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கவனமுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- அப்பர் பவானி-105, தேவாலா-93, சேரன்கோடு-91, பந்தலூர்-70, ஓவேலி-68, நடுவட்டம்-42, ஊட்டி-18.5.