X

நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் இருவர் யானை தாக்கி பலி

நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த மாயார் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது51). தொழிலாளி. இவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டு அருகே உள்ள தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து அந்த வழியாக நடந்து சென்றார்.

அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்தது. யானை வருவதை பார்த்ததும், நாகராஜ் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார். ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து, அவரை துதிக்கையால் தூக்கி கீழே போட்டது. பின்னர் காலால் மிதித்தது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் யானையை அங்கிருந்து விரட்டினர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தேவர்சோலை சர்க்கார் மூலை பகுதியை சேர்ந்தவர் மகாதேவ். இவர் அந்த பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை பணி முடிந்து, தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தேவர்சோலை பகுதியில் வந்த போது அவரை ஒற்றை யானை வழிமறித்தது.

யானை நிற்பதை பார்த்ததும், அங்கிருந்து தப்பியோட அவர் முயற்சித்தார். ஆனால் அதற்குள்ளாகவே அவரை யானை தாக்கி தூக்கி வீசியது. பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி மகாதேவ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

நீலகிரியில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதனை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.