நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜான் சல்வின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் மற்றும் நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் 1819-ம் ஆண்டு நீலகிரியை கண்டறிந்தார். கன்னேரிமுக்கு கிராம பகுதியில் உள்ளூர் மக்கள் உதவியுடன் கற்களால் ஆன வீடு ஒன்றை கட்டினார். அந்த வீட்டை தனது அதிகாரபூர்வ பங்களாவாகவும், அலுவலகமாகவும் பயன்படுத்தினார்.
அங்கிருந்தவாறு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் செய்து வந்தார். நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக ஜான் சல்லிவன் பொறுப்பேற்று 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
அந்த காலகட்டத்தில் ஊட்டி நகரம் மற்றும் ஏரியையும் உருவாக்கினார். ஒரு ஏக்கர் நிலத்தில் தேயிலை, சின்கோனா, தேக்கு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டார். மேலும் முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிட்டு, இங்கு அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றினார்.
இதுதவிர சாலை வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளும் இவரது காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இப்படி ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் கடந்த 1855-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி இறந்தார்.
கன்னேரி முக்கு பகுதியில் அவர் கட்டிய பங்களா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு ஜான் சல்லிவன் நினைவகமாக மாற்றப்பட்டது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட நகரங்களில் அரிய பழயை மற்றும் தற்போதைய புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
ஊட்டியை உருவாக்கியவரும், ஊட்டியின் முதல் கலெக்டராக பொறுப்பேற்று மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்த ஜான் சல்லிவனுக்கு ஊட்டியின் 200-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று அரசு சார்பில் ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் முக்கோண சந்திப்பில் ஜான் சல்லிவன் உருவசிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.