பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு பாதுகாப்புப் படையில் சேர்க்கப்படுகின்றன.
இந்நிலையில், டார்பிடோ (ஸ்மார்ட்) என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசா மாநில கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், சூப்பர்சானிக் ஏவுகணையின் உதவியுடன் ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை அமைப்பின் வேகக் கட்டுப்பாடு உள்பட பல அதிநவீன வழிமுறைகள் சரிபார்க்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் இந்திய கடற்படை திறனை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.