நீரஜ் பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரை கவுரவிக்கும் வகையில் நீரஜ் பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிகுமார் வெள்ளிப்பதக்கமும், குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஆக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றியது.

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தொடர்ந்து பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகிறது.

அந்தவகையில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் விதமாக கரூர் சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நீரஜ் என்ற பெயர் உள்ளவர்களுக்கு தலா 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் நீரஜ் என்ற பெயர் உள்ளவர்கள் எங்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனவும், ஆதார் அட்டை கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சலுகை நேற்று முதல் தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools