நீரஜ் சோப்ரா விரைவாக குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் அரியானாவைச் சேர்ந்தவர் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா(21). இவர் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் இவர் 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தேசிய சாதனையாளராக விளங்குகிறார்.
நீரஜ் வலது முழங்கையில் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த காயத்துக்கு நீரஜ் நேற்று முன்தினம் மும்பையில் ஆபரேஷன் செய்து கொண்டார். 2 மணி நேரம் நடந்த சிகிச்சையில், முழங்கை மூட்டில் நொறுங்கிய எலும்பு துண்டு அகற்றப்பட்டது.
காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடைய 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும். இதனால் தோகாவில் வரும் செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. ஆஸ்பத்திரியில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள சோப்ரா, வலுவான வீரராக மீண்டு வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி நீரஜ் குறித்து தனது டுவிட்டர் பதிவில், ‘முழங்கைகளில் அடிப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் இந்தியாவின் முன்னணி வீரர் நீரஜ் சோப்ரா விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். நீரஜ் மிகவும் வலிமையான உறுதியான வாலிபர். அவரால் இந்தியா தொடர்ந்து பெருமிதம் அடைந்துள்ளது. அனைத்து மக்களும் நீரஜ் விரைவில் குணமடையவே பிரார்த்திக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.