சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரூ ராஜீவரூ, கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜைகள் மேற்கொண்டார். இதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘சபரிமலையில் நேற்று (நேற்று முன்தினம்) வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜை செய்துள்ளார், தந்திரி. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானதாகும். இந்த வழக்கில் அவரும் ஒரு வாதி என்பதால், அவரது கருத்தையும் கேட்டே தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
மாநிலத்தில் நேற்று நடந்த வன்முறை குறித்து பினராயி விஜயன் கூறும்போது, ‘நேற்று முதல் (நேற்று முன்தினம்) மாநிலத்தில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. செய்தியாளர்கள், பெண்கள், போலீசார் என பலர் தாக்கப்பட்டு உள்ளனர். 31 போலீசார் காயமடைந்துள்ளனர். 79 அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டு உள்ளன. இது பா.ஜனதா மற்றும் சங்க பரிவார அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்’ என குற்றம் சாட்டினார்.