X

நீதிமன்ற காவலில் வைப்பதை ரத்து செய்ய கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். மேலும் அவர் தொடர்பான இரண்டு வழக்குகள் விசாரணைக்கு வர இருக்கின்றன.

இந்த நிலையில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டதை நீக்கக்கோரிய செந்தில் பாலாஜி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். ஏற்கனவே, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலை நீக்கக்கோரிய மனு ஏற்கத்தக்கதல்ல என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி சென்றார். செந்தில் பாலாஜியின் சிகிச்சை தொடர்பான விவரங்கள் மற்றும் வழக்கு தொடர்பான விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார். அப்போது செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதியிடம் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதேசமயம், அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளார்.

Tags: tamil news