நீதிமன்ற காட்சியில் பதட்டத்துடன் நடித்த பூர்ணா!
‘சவரக்கத்தி’ படத்தில் அவரின் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை பூர்ணா. இவர் தன் நடிப்பாற்றல் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, சக்தி வாய்ந்த நடிப்பை வழங்குவார். தற்போது ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்து வரும் ‘அடங்க மறு’ படத்தில், வழக்கறிஞராக நடித்து வருகிறார்.
இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இந்த கதாபாத்திரத்தில் அவரை தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் ஒரு மிருதுவான காரணத்தைக் கூறுகிறார். அவர் கூறும்போது, “ஆரம்பத்தில், வலுவான ஒரு சிந்தனை மனதில் தோன்றும் வரை, நான் ஒரு ஆண் நடிகரை தான் இந்த வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். பொது நிகழ்ச்சிகளிலிருந்து, டைனிங் டேபிள் வரை பாலின சமத்துவம் பற்றி நாம் பேசும்போது, அந்த வரம்புக்குள் அவர்களை கட்டுப்படுத்துவது அநியாயமாக இருக்கும். எனவே, இந்த கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடிகரை நடிக்க வைக்கும் யோசனையை செயலாக்கினேன், படக்குழுவும் அதற்கு இசைந்தார்கள். இருப்பினும், ஒரு பொருத்தமான நடிகையை தேர்ந்தெடுப்பது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அங்கு பூர்ணா அனைவரது தேர்வாகவும் வந்தார். இப்போது பூர்ணாவை தவிர வேறு எவருமே இந்த பாத்திரத்தை முழுமையாக்கி இருக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்” என்றார்.
நடிகை பூர்ணா இந்த பாத்திரத்தில் நடித்த தனது அனுபவத்தை பற்றி கூறும்போது, “இது ஒரு எளிமையான விஷயம் அல்ல. உண்மையில், முதல் முறையாக நீதிமன்ற அறை செட்டுக்குள் நுழைந்தவுடன் எனக்கு பதட்டம் ஏற்பட்டது. என்ன தான் முன் தயாரிப்பு மற்றும் ஒத்திகைகள் பார்த்திருந்தாலும், படப்பிடிப்பு சூழ்நிலையில் தான் ஒரு கதாபாத்திரத்தின் சரியான கணிப்பை நாம் உணர முடியும். இந்த கதாபாத்திரத்தின் உடல் மொழி, உரையாடல் மற்றும் மேனரிஸம் ஆகியவற்றில் முழுமையான நேர்த்தி தேவைப்பட்டது. ரவி மற்றும் கார்த்திக் இருவருக்கும் நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ரசிகர்கள் என் நடிப்பை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.