Tamilசெய்திகள்

நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் – செல்லூர் ராஜூ

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதாவது:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை எம்.எல்.ஏ.க்கள் தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டு உள்ளார். அதன்படி நான் வழங்கியுள்ள கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு தாலிக்கு தங்கம், ரூ.50 ஆயிரம் நிதி உதவி என ரூ.1 லட்சம் வரை கிடைத்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டு, தற்போது புதுமைப் பெண் திட்டத்தை தி.மு.க. அரசு தொடங்கி உள்ளது.

ஆனால் இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் தான் கிடைக்கிறது. அதுவும் மதுரை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் வெறும் 538 மாணவிகள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறைந்த எண்ணிக்கை. எனவே தகுதியான மாணவிகள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும்.

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதலமைச்சர். நீதிமன்றம் உத்தரவுப்படி ஒரு கட்சியை நடத்த முடியாது. நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி தான் (அதிமுக) பொதுச்செயலாளர் என்று தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.