நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் – கேரள நீதிமன்ற பெண் நீதிபதிகள் கோரிக்கை

தற்போது பெண் நீதிபதிகள், கோர்ட்டில் சேலை, வெள்ளை கழுத்துப் பட்டை, கருப்பு நிற மேலங்கி (கவுன்) அணிய வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த ஆடைமுறை அசவுகரியமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக, தற்போதைய கோடைகாலத்தில், நெரிசல் நிறைந்த கோர்ட்டுகளில் இவ்வாறு இறுக்கமாக ஆடை அணிந்து பல மணி நேரம் அமர்ந்திருப்பது மிகவும் சிரமமாக உள்ளது, அதிலும் பல சமயங்களில் மின் தடை ஏற்படும்போது வியர்த்து வழிய வேண்டியுள்ளது என்பது பல பெண் நீதிபதிகளின் மனக்குறை.

இந்நிலையில் கேரள கோர்ட்டு பெண் நீதிபதிகள் சுமார் 100 பேர் கேரள ஐகோர்ட்டு பதிவாளரை நாடியுள்ளனர். அவரிடம், பெண் நீதிபதிகளுக்கான 53 ஆண்டு கால ஆடைவிதியில் மாற்றம் செய்ய வேண்டும். கோர்ட்டில் பணியின்போது சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

தெலுங்கானா ஐகோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில், பெண் நீதிபதிகள் பணியின்போது வழக்கமான சேலையுடன், சல்வார், சுடிதார், நீளமான பாவாடை, பேண்ட் அணியலாம். அவை வெள்ளை, வெளிர் மஞ்சள், சாம்பல், கருப்பு வண்ணத்திலோ, அவற்றின் கலவையிலோ இருக்கலாம் என தெரிவித்திருந்தது.

கடந்த 1970-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்த, நீதிபதிகளுக்கான ஆடைவிதியின்படி, பெண் நீதிபதிகள் மிதமான வண்ணத்திலான பிராந்திய ஆடை, மேலங்கியுடன், வெண்ணிறத்திலான கழுத்துப் பட்டை அணிய வேண்டும். அதேபோல ஆண் நீதிபதிகள், கருப்புநிற ‘ஓபன் காலர்’ கோட்டு, வெண்ணிற சட்டை, வெள்ளை நிறத்திலான கழுத்துப் பட்டையுடன், மேலங்கி அணியலாம். கேரள பெண் நீதிபதிகளின் முறையீட்டை கேரள ஐகோர்ட்டு கவனிக்க உள்ளதாக தெரிகிறது. அதன்பின்தான், இந்த 53 ஆண்டுகால ஆடைவிதியில் மாற்றம் வருகிறதா என்பது தெரியவரும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools