நீட் மறுதேர்வு தொடர்பான வழக்கு – தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ந்தேதி வெளியானது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.
நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகளை திரும்பப்பெற்று மறுதேர்வு நடத்த கோரி தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஆனால் முறையான விளக்கங்கள் ஏதும் தரப்படவில்லை. தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, நீதிபதிகள், தேர்வை நடத்தக்கோருவது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 8-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.