நெல்லை, தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் செய்தார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பல மன அழுத்தங்களால் மாணவர்கள் உயிரிழந்து வரும் நிலையில் தமிழக அரசு அதனை கவனத்தில் எடுத்து கொள்ளாமல் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது.
எனவே மாணவர்களின் உயிர் இழப்பை தடுப்பதற்கு அவர்களை குழப்பாமல், தி.மு.க. அமைதியாக இருந்தாலே போதும். தேர்தல் வரும் போதெல்லாம் தி.மு.க. நீட் தொடர்பாக பேசி ஆதாயம் தேடிக்கொள்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாணவர்களை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கக்கூடிய அரசு, ஏன் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெரியவர்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கிறது.
இந்த அரசு டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கோவில்களுக்கு தரவில்லை. எனவே வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த அரசு, எல்லா மதத்தினரையும் சமமாக நடத்தவேண்டும். அனைவருக்கும் அனைத்து நிலையிலும் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
கரீப் கல்யாண் அன் யோஜனா, தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க நினைக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களிலும் மாநில அரசு, பாரத பிரதமர் படத்தை கூட வெளியிடாமல் எல்லாம் மாநில அரசு செய்வதாக சொல்லிக்கொள்வது எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. ஆட்சி அமைந்ததும் வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கும். எனவே நகை அடமானம் வைக்காதவர்கள் இப்போதே வங்கியில் நகை கடன் பெற்றுக்கொள்ளுங்கள். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கடன் தள்ளுபடி பெறலாம் என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
ஆனால் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசும்போது, வங்கிகளில் முறைகேடாக நகை அடமானம் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கிறார். நியாயப்படி பார்த்தால், முதலில் உதயநிதி ஸ்டாலின் மீது தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதெல்லாம் தி.மு.க. அரசியலுக்காக போடுகிற நாடகம்.
இவ்வாறு அவர் கூறினார்.