X

நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய அனைத்து வழக்குகளும் தள்ளுபடி!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி, அரசியல் கட்சிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்றின் வீரியம் குறையாததால், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி மேலும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த புதிய மனுக்கள் இன்று நீதிபதி அசோக் பூ‌‌ஷண் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வை தள்ளி வைக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். நீட் தேர்வு தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுவிட்டதால் இந்த புதிய மனுக்களை தள்ளுபடி செயது உத்தரவிட்டனர்.

‘இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. மறுஆய்வு மனுக்கள் கூட தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இனி அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். பீகார் வெள்ளம் காரணமாக தேர்வை ஒத்திவைக்கும்படி சில மனுக்களில் கூறப்பட்டிருந்தது. சில மனுக்களில், வார இறுதி நாள் முழு ஊரடங்கை காரணம் காட்டப்பட்டது’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததால், 13ம் தேதி திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்.