Tamilசெய்திகள்

நீட் தேர்வு மோசடி விவகாரம் – தொடர் அமளியால் மக்களை ஒத்திவைப்பு

மருத்துவ படிப்புக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். கடந்த 4-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.

இந்த நிலையில் நீட் தேர்வில் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்பனை ஆகி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. 6 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வினாத்தாள்களை கசிய விட்டதாக நேற்று 2 பேரை பீகாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க செய்துள்ளன. நேற்று இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டன.

பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மக்களவை கூடியதும் விவாதத்தை ஒத்திவைத்து விட்டு நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவாதத்தை தொடங்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எழுந்து, “நீட் தேர்வு குளறுபடியால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வு பற்றி சபையில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஆனால் விவாதத்தை தொடங்குவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை அமைதி காக்கும்படி சபாநாயகர் பல தடவை கேட்டுக்கொண் டார். ஆனால் அமளி குறையவில்லை. இதையடுத்து மக்களவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைப்பதாக அறிவித்தார். மாநிலங்களவையிலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி. திரிவேதி விவாதத்தை தொடங்க இருந்தார்.

ஆனால் மாநிலங்களவை தொடங்கியதும் நீட் பற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் அமளி எழுந்தது. இதனால் மேல்சபையை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் அறிவித்தார். இதன் பின்னர் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை வருகிற திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.