மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. இதில் நாடு முழுவதும் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சமீபத்தில் நீட் தேர்வுக்கான முடிவு வெளியானது.
இதற்கிடையே நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாகவும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் மையத்தில் இருந்து அதிகம் பேர் முதலிடம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 1563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடு தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால அமர்வு முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, “நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் யாராவது சுணக்கமாகவோ அல்லது அலட்சியமாகவே இருந்தால் கூட முழுமையாக ஆராய வேண்டும். இவ்விகாரத்தை கண்டிப்பான முறையில் அணுக வேண்டும்.
ஒருவர் மோசடி செய்து மருத்துவராக ஆவதை யோசித்து பாருங்கள். அது போன்ற நபர் சமுதாயத்திற்கும், அந்த அமைப்புக்கும் எவ்வளவு மோசமான விளைவுகளை கொடுப்பார் என்பதை யோசித்து பார்க்க வேண்டியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கடினமாக படிக்கிறார்கள். ஆனால் ஒரு சில குறுக்கு வழிகள் மூலம் சிலர் வெற்றி பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு தவறு நடந்திருந்தால் அதை நாம் ஒப்பு கொண்டுதான் ஆக வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வு முறைகேடுகள், நமது தேர்வு முறையின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் விடுத்த நோட்டீஸ், இப்பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டுகிறது. மாநில அளவிலான தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, ஒரே நுழைவு தேர்வாக்கிய ஒன்றிய அரசு இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.