Tamilசெய்திகள்

நீட் தேர்வு மூலம் ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர்களை சேர்க்க முடிவு

நாடு முழுவதும் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் கல்லூரிகளில் 85 ஆயிரம் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் உள்ளன.

மேலும் புதிய கல்லூரிகள் திறப்பு, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் சீட் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றின் மூலம் அடுத்த ஆண்டு 90 ஆயிரம் மாணவர்கள் வரை சேர்க்கப்பட உள்ளனர்.

மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அனைவரும் மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த ரேங்கின் அடிப்படையில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

ஆனால் மத்திய அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் மற்றும் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு மட்டும் தனியாக நுழைவு தேர்வு நடத்தி இதுவரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது.

நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 1500 மருத்துவ இடங்கள் இருக்கின்றன. ஜிப்மரில் 200 மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தனியாக நுழைவு தேர்வு நடத்துவது அதிக செலவையும், பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.

எனவே நீட் தேர்வு மூலமே இந்த மாணவர்களையும் தேர்வு செய்யலாமா? என மத்திய சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது. இதில் அந்த கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற முடிவுக்கு மத்திய சுகாதாரத்துறை வந்துள்ளது.

எனவே அடுத்து ஆண்டு முதல் எய்ம்ஸ், ஜிப்மர் நுழைவு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

நீட் தேர்வு அடிப்படையில் உரிய ரேங்க் எடுத்தவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *