மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், மோசடி, ஓ.எம்.ஆர். தாளை சேதப்படுத்துதல் போன்ற நேர்மையற்ற காரியங்களில் ஈடுபட்ட 63 மாணவர்கள் பிடிபட்டனர். அவர்கள் மீதான புகார்களை விசாரிக்க கல்வி மற்றும் தேர்வுகளில் நிபுணர்களான 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், 12 மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளும், 2 மாணவர்களுக்கு தலா ஓராண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதி 40 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்தது பற்றி விசாரிக்க மத்திய அரசு 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. அக்குழு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அதன் பரிந்துரை அடிப்படையில், 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் அல்லது எந்த மாணவரும் பாதிக்கப்படாதவகையில் மாற்று வழிமுறை உருவாக்கப்படும்.
முழு மதிப்பெண் பெற்ற 67 பேரில், 44 பேருக்கு இயற்பியல் தேர்வு விடைத்தாள் மாற்றம் காரணமாகவும், 6 பேருக்கு நேர விரயம் காரணமாகவும் கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தலைமை இயக்குனர் சுபோத்குமார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது, நீட் நுழைவுத்தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.